×

அந்தோணியார் ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கமுதி, ஜூன் 18: கமுதி புனித அந்தோணியார் ஆலய மின்னொளி அலங்கார தேர்பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கமுதி மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயமாகும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர் திருவிழா வருடா வருடம் ஜூன் மாதத்தில் நடை பெறுவது வழக்கம். அது போல், இந்த வருட திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அந்தோணியார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்பு ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில், இந்தக் கொடி சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சி பங்குத் தந்தை அருள்சந்தியாகு மற்றும் அருட் தந்தையர்கள் முன்னிலையில், பரத உறவின் முறையினர் இந்த கொடியை ஏற்றினர். இதில் 300க்கும் மேற்பட்ட கிறித்துவ மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் தினந்தோறும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், காலை திருவிழா திருப்பலி நடைபெற்றது. பின்னர் இரவு புனித அந்தோணியார், புனித ஜெபஸ்தியார், புனித சவேரியார், புனித மிக்கேல் சம்மனசு ஆண்டவர் போன்ற புனிதர்களின் தேர்பவனி மின்னொளி அலங்காரத்துடன் நடைபெற்றது.

ஆலயத்திலிருந்து துவங்கிய தேர்பவனி நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் என முக்கிய வீதிகள் வழியாக சென்று, நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. தேர்பவனி சென்று கொண்டிருக்கும் போது, வழியில் ஆங்காங்குள்ள ஏராளமான இந்துக்கள் பொரிகடலை, மிளகு,உப்பு, மலர்மாலை, மெழுகு வர்த்தி போன்றவற்றை கொடுத்து வழிபட்டனர். பேண்டு வாத்தியம், வானவேடிக்கை, மற்றும் மேல தாளங்களுடன் நடைபெற்ற இந்த தேர்பவனியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு கிறிஸ்தவ தெருக்களில் மட்டும் இந்த தேர்ப்பவனி நடைபெற்றது. இன்று கர்த்தர் நாதர் சுவாமி நினைவுத் திருப்பலி அசனம் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, ஆலயம் மற்றும் கிறிஸ்துவ தெருக்கள் முழுவதும் மின்னொளியுடன் ஜொலிப்புடன் காணப்படுகிறது.

The post அந்தோணியார் ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Anthony's Church ,Therbhavani ,Christians ,Kamudi ,St. Anthony's Church ,Kamudi… ,Antoniyar Temple ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...